'தேவர் மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, நடிகை நீலிமா ராணி இந்த படத்தை தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். பின், தம், இதய திருடன், திமிரு, மொழி, உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த இவர், பல சீரியல்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் வெளியான தாமரை சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரை நாயகியாகவும் மாறியுள்ளார் நீலிமா. அதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயக்குனர் செல்வேந்திரன் என்பவர் இயக்கம் படத்தில் தான் நடிக்க உள்ளார். 

இந்த படத்திற்காக தன்னுடைய பெயரை கூட, ஜோசியரின் அறிவுறுத்தல் படி நீலிமா இசை என மாற்றிக்கொண்டுள்ளார். 

'கருப்பங்காட்டு வலசு' என பெயரிடப்பட்டுள்ள இந்த, படத்தில் நடிப்பது குறித்து,  தனது கதாபாத்திரம் குறித்தும் தெரிவித்துள்ள நீலிமா, இது குற்றப் பின்னணி உள்ள கதையம்சம் கொண்ட படம் என்றும், பழைய பழக்க வழக்கங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட ஒரு கிராமத்தை மாற்ற முயற்சிக்கிறார் ஒரு பெண். அப்போது அந்த ஊரில் ஒரு குற்றம் நடக்கிறது அதன் விளைவுகள்தான் திரைக்கதை என தெரிவித்துள்ளார். 

அடுத்து என்ன நடக்கும் என்கிற சுவாரஸ்யத்தோடும், திகிலோடும் இந்த படம் நகரும் என்றும் கூறியுள்ளார். இந்த படம் குறித்து, ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.