’கடந்த 10 ஆண்டுகளாக நான் மீடியாவுக்கு பேட்டிகள் கொடுப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து வந்திருக்கிறேன். இந்த உலகம் என்னைப்பற்றி என்ன நினைக்கிறது என்பது குறித்து நான் கவலைப் படுவதே இல்லை’என்று ஒரு வட இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு மனம் திறந்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

‘வோக் இண்டியா’அக்டோபர் மாத இதழின் அட்டைப்படத்தில் மிக வித்தியாசமான கெட் அப்பில் இடம் பெற்றிருக்கிறார் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் வட இந்திய நடிகைகள் மட்டுமே அட்டைப்படங்களில் இடம்பெற்று வந்த நிலையில் தனக்கு அட்டையில் இடம் கொடுத்ததால் அந்த இதழுக்கு ஒரு நீண்ட பேட்டி அளித்திருக்கிறார் அவர்.

அப்பேட்டியில்,’ சினிமா முழுக்க முழுக்க ஆன்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஆனால் நான் எங்கேயும் என்னை விட்டுக்கொடுத்ததே இல்லை. என் விருப்பப்படிதான் கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.படப்பிடிப்புக்குச் செல்வது, காஸ்ட்யூம் அணிவது, எனது மேக் அப் போன்ற எல்லாவற்றையும் நானேதான் முடிவு செய்கிறேன். சில சமயம் என்னையும் மீறி கதாநாயகர்களுக்காக கிளாமராக உடை அணிய வேண்டிய நெருக்கடியும் வரத்தான் செய்கிறது. எத்தனை முறைதான் ‘நோ நோ’என்று சொல்லிக்கொண்டே இருக்க முடியும்?

நான் சொல்லப்போனால் ஒரு தனிமை விரும்பி. இருந்தாலும் என் படங்கள் பாடல்கள் ஒளிபரப்பாகிற எந்த டி.வி.சானல்களையும் பார்ப்பதில்லை. இந்த உலகம் என்னைப்பற்றி என்ன நினைக்கிறது என்பது குறித்து நான் எப்போதும் கவலைப்பட்டதே இல்லை. எனது ஒன்றிரண்டு பேச்சுகள் திரித்துச் சொல்லப்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளாக நான் யாருக்கும் பேட்டி அளித்ததே இல்லை. என் வேலை படங்களில் நடிப்பது மட்டும்தான். அதை மட்டும் ஒழுங்காகச் செய்து நல்ல பெயர் வாங்கவேண்டுமென்று நினைக்கிறேன்’என்று அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நயன்.