Actress Laila : இன்று உலக அளவில் அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், பிரபல நடிகை லையா தனது இரு மகன்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கோவாவில் கடந்த 1980 ஆம் ஆண்டு பிறந்த நடிகை தான் லைலா. நடனம், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பல கலைகளை கற்றுக் கொண்ட நடிகை லைலா கடந்த 1996 ஆம் ஆண்டு தனது 16 வது வயதில் கலை உலகில் களம் இறங்கினார். ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த லைலா கடந்த 1999 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான "கள்ளழகர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை லைலாவிற்கு கடந்த 2001 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான "தீனா" திரைப்படம் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு "தில்", "அள்ளித்தந்த வானம்", "நந்தா", "காமராசு", "உன்னை நினைத்து", "மௌனம் பேசியதே" மற்றும் "பிதாமகன்" என்று பல வெற்றி திரைப்படங்களில் லைலா நடித்தார்.
அதற்காக FIlm Fare, தமிழ்நாடு அரசு வழங்கும் மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை லைலா பெற்றார். கடந்த 2006 ஆம் ஆண்டு வரை கலை உலகில் பயணித்து வந்த நடிகை லைலா, மெஹந்தி என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதோடு தனது திரையுலக பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதன் பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து தற்பொழுது மீண்டும் நடிக்க துவங்கி உள்ளார். இந்நிலையில் தனது இரு மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். குடும்பத்தில் உயரம் குறைவாக இருப்பது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது என்று கூறி தன் தலைக்கு மேல் வளர்ந்திருக்கும் இரு மகன்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
