செக் மோசடி வழக்கில் பிரபல நடிகை கொய்னா மித்ராவுக்கு மும்பை நீதிமன்றம் ஆறு  மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில் அந்த வழக்கு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.

தமிழில்  விக்ரம் நடித்த ’தூள்’,  சூர்யாவின் ’அயன்’,  அஜீத்தின் ’அசல்’ உள்ளிட்ட படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியவர் பிரபல இந்தி நடிகை கொய்னா மித்ரா. இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பை மாடல் பூனம் சேத் என்பவரிடம்  ரூ. 22 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.  அதைச் சொன்னபடி  திரும்பத் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கொய்னா மித்ரா ,  பூனம் சேத்துவுக்கு ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை  கொடுத்துள்ளார். ஆனால் வாங்கி கணக்கில் போதிய  பணமில்லாததால் காசோலை திரும்பியுள்ளது.  இதையடுத்து பூனம் சேத் கொய்னா மீது  மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்குத் தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகை  கொய்னா மித்ராவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்ததுடன்  4.64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.  இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள கொய்னா மித்ரா, இது வேண்டுமென்றே திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட மோசடி வழக்கு என்றும் இதை எதிர்த்து  மும்பை  உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

4லட்ச ரூபாய்க்காக பிரபல நடிகை ஒருவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.