மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, காவல்துறையினரை கடமையை செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகை காவ்யா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். 

மும்பையை சேர்ந்தவர் நடிகை காவ்யா தப்பார் (Kavya Thapar). இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் மார்க்கெட் ராஜா என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காவ்யா தப்பார் நடித்திருந்தார்.

நேற்று முன்தினம் மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு தனது நண்பருடன் சென்ற காவ்யா அங்கு நடந்த பார்ட்டியில் மது அருந்திவிட்டு, நள்ளிரவு 1 மணி அளவில் காரில் வெளியே வந்துள்ளார். குடிபோதையில் கார் ஓட்டிய அவர், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியுள்ளார். 

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், நடிகை காவ்யாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்காமல் குடி போதையில் ரகளை செய்துள்ளார் காவ்யா. மேலும் விசாரணை செய்த பெண் காவலர் ஒருவரின் சீருடையை இழுத்து தாக்கவும் முயற்சித்துள்ளார். இதில் அந்த பெண் காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, காவல்துறையினரை கடமையை செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகை காவ்யா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காவ்யா தப்பார் (Kavya Thapar), பின்னர் பைகுலா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்.... விஜய் வந்துட்டார்? அஜித் வருவாரா? - ‘தல’ தமிழ்நாட்லயே இல்லையாமே...!