Kasthuri tweet : அவுங்களுக்காக சேர்ந்து இருங்க.... விவாகரத்து முடிவை அறிவித்த தனுஷுக்கு கஸ்தூரி சொன்ன அட்வைஸ்
18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் திடீர் விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
நடிகர் தனுஷுக்கும், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணமானது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
தனுஷின் இந்த எதிர்பாரா அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிர வைத்தது. ரசிகர்கள் அனைவரும் ஏன் இந்த முடிவு, தயவு செய்து மீண்டும் சேர்ந்து விடுங்கள் என தனுஷுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் பிரபலங்கள் சிலரும் தனுஷின் விவாகரத்து முடிவு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “விவாகரத்து என்பது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம், ஆனால் குழந்தைகளுக்கு அது ஒரு தவறான முடிவு. பிள்ளைகளின் நலனுக்காக ஒன்றாக வாழ வேண்டும் என நமது முன்னோர்கள் சரியாக தான் கூறி இருக்கிறார்கள். குழந்தை பிறந்து விட்டால் அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
பிறருக்காக வாழாவிட்டால் நம் வாழ்வு அர்த்தமற்றது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வழியில் செல்ல உரிமை உண்டு. என்னைப் பொறுத்தவரை, என் குழந்தைகள் மற்றும் குடும்ப நலன் முதன்மையானது” என தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், ‘நீங்கள் சொல்வது தவறு... அது எப்படி சந்தோஷமில்லாத பெற்றோர்கள் மத்தியில் குழந்தைகள் சந்தோஷமாக இருக்க முடியும்’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி, “தம்பதியாக பார்க்கும் போது கெட்டவர்களாகவோ, சோகமானவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் நல்ல பெற்றோர்கள் தான்” என கூறியுள்ளார்.