பிரபல தொலைக்காட்சியும் மாடலுமான கெகனா வசிஸ்த், இடையில் ஓய்வெடுக்காமல் 24 மணி நேரத்துக்கும் மேலாக படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான கெகனா வசிஸ்த் மும்பையில் வசித்து வருகிறார். (இவருக்கு வயது 31). 70க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும், சில தெலுங்கு திரைப்படங்களிலும், வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். தமிழில் ‘பேய்கள் ஜாக்கிரதை’படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் மாலத் தீவு பகுதியில் வெப் சீரீஸ் ஒன்றிற்கான ஷூட்டிங் நடந்து வந்தது. இதில் கலந்துகொண்டு நடித்து வந்த அவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உடனடியாக மலாத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகையை அனுமதித்தனர். 

அவசர சிசிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் போதே நடிகை கெகனாவிற்கு நாடித்துடிப்பு இல்லை என்றும் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்த பின்னரே அவரின் நாடித்துடிப்பு மீண்டும் வந்தது என்றும், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது அவரின் உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும், இரண்டு நாட்களாக சரியான உணவு உட்கொள்ளாமல், சில எனர்ஜி பானங்களையும், மருந்துகளையும் மட்டுமே எடுத்துக் கொண்டதுதான் நடிகையின் இந்த நிலைமைக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.