’சினிமா படவாய்ப்புகள் தொடர்பாக வரும் மெஸேஜ்களில் பாதிக்குப் பாதி படுக்கைக்கு அழைக்கும் மெஸேஜ்களாகவே இருக்கின்றன’என்று தெரிவித்துள்ளார் மலையாளத் திரையுலகின் இளம் வரவான காயத்ரி சுரேஷ்.

தமிழில் நடிகர், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ’4ஜி’படத்தில் நடித்து வரும் காயத்ரி சுரேஷ் பல மலையாளப்படங்களிலும் ஒன்றிரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்துவருகிறார். சமீபகாலமாக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கதாநாயகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது ‘மீடூ’வில் தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில் நடிகை காயத்ரி சுரேஷும் தன் பங்குக்கு புகார் பட்டியல் வாசித்துள்ளார்.

இது தொடர்பாக காயத்ரி சுரேஷ் அளித்த பேட்டியில் “என்னை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறினர். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று கேட்டு செல்போனில் குறுந்தகவலும் அனுப்புகின்றனர். அவர்கள் அனுப்பிய குறுந்தகவலுக்கு நான் பதில் அளிக்கவில்லை. பதில் சொன்னால் உரையாடல் தொடரும். பதில் அனுப்பாமல் இருந்தால் எனது எண்ணம் புரிந்து ஒதுங்கிவிடுவார்கள்” என்கிறார்.

இந்தித் திரையுலகுக்கு அடுத்த படியாக கேரளத்தில்தான் நடிகைகள் மூலமாக அதிகமான பாலியல் தொல்லை புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.