Anushka: பட வாய்ப்பின்றி தவித்த அனுஷ்காவுக்கு வாய்ப்பளித்த விஜய்... மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கிறார்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, கடந்த ஓராண்டுக்கு மேலாக பட வாய்ய்ப்புகள் ஏதும் இன்றி தவித்து வந்தார்.
தமிழில், டாப் ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைவருடனும் நடித்துள்ளவர் அனுஷ்கா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் தேவசேனையாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட அனுஷ்கா, அபடத்துக்கு பின் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
பின்னர் தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த அனுஷ்கா, சைலன்ஸ் என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். இதில் காது, கேட்காதா, வாய் பேச முடியாத பெண்ணாக அனுஷ்கா நடித்திருந்தார். சவாலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும், இப்படம் அவருக்கு சறுக்கலை தான் தந்தது.
இப்படம் கடும் தோல்வியை சந்தித்ததால், கடந்த ஓராண்டுக்கு மேலாக பட வாய்ப்பு இன்றி தவித்து வந்தார் அனுஷ்கா. நீண்ட நாட்களுக்கு பின் அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆன அவருக்கு தற்போது தமிழ் பட வாய்ப்பு ஒன்றும் கிடைத்துள்ளது.
அதன்படி தமிழில் அவர் நடிக்க உள்ள புதிய படத்தை ‘தலைவி’ பட இயக்குனர் விஜய் இயக்க உள்ளார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே தெய்வத் திருமகள், தாண்டவம் போன்ற படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாம்.