actress amala paul posted a boat ride picture in her instagram page to criticise car tax issue
அண்மையில் வெளிநாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்து, அதை புதுச்சேரியில் பதிவு செய்து, பல விதமான சர்ச்சைகளுக்கு ஆளானதுடன், புதுச்சேரியின் அரசியலையும் கிளறிவிட்டார் நடிகை அமலா பால்.
சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை புதுச்சேரியில் போலியான முகவரியைக் கொடுத்து பதிவு செய்து, குறைந்த சாலைவரியே கட்டினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து, புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார்களுக்கு குறைந்த சாலை வரியைச் செலுத்தி பலர் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த விவகாரம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை ரொம்பவே உசுப்பேற்றி விட்டது. புதுவையின் நிதிநிலையே மோசம் போய்விட்டது என்று அவர் டிவிட்டரில் பதிவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி போக்குவரத்து செயலருக்கும், காவல்துறை முதுநிலை எஸ்.பி.க்கும் உத்தரவிட்டார்.
ஆனால், இந்த விவகாரத்தை சர்வ சாதாரணமாகக் கையாண்ட புதுவை மாநில போக்குவரத்து அமைச்சர் ஷாஜஹான், போக்குவரத்துத் துறை சட்டவிதிகள்படி ஒருவர் வாகனத்தை பதிவு செய்ய, வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, பாஸ்போர்ட், பள்ளிச் சான்று, பிறப்புச் சான்று, பிரமாணப் பத்திரம் என இருப்பிடச் சான்றை உறுதிப்படுத்தலாம். அமலாபாலும் தனது கையெழுத்துடன் கூடிய பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரி திலாஸ்பேட்டையில் வாடகை வீட்டில் தான் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றை தாக்கல் செய்துள்ளார். மேலும், எல்ஐசி பாலிசி நகலையும் இந்த முகவரியிலிருந்து இணைத்துள்ளார். எனவே, அவர் காருக்கு வரி கட்டியதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றார்.
இத்தகைய பின்னணியில் நடிகை அமலா பால், தன்னைச் சுற்றிச் சுழலும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், இன்ஸ்டகிராமில் ஒரு பதிவு எழுதி படகுச் சவாரி செய்வது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில்...

கவர்ச்சிகரமான நகர வாழ்க்கையிலிருந்தும் அநாவசிய ஊகங்களிலிருந்தும் ஓட வேண்டிய தேவை இந்த நேரம். இப்போது நான் ஒரு படகுச் சவாரியை தேர்ந்தெடுத்திருக்கிறேன். குறைந்தபட்சம் இதில் சட்டத்தை மீறியதற்கான எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் இல்லை அல்லது என் 'நலன் விரும்பிகளுடன் நான் இருமுறை இதை சரி பார்க்க வேண்டும்... - என்பதாக பொருமித் தள்ளியுள்ளார் அமலா பால்.
நல்லவேளை... சென்னையில் தற்போது பெய்துள்ள மழையினால் பெருக்கெடுத்து ஓடும் சாலையில் படகுச் சவாரி செய்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, சொகுசு படகுக் காரில் செல்வதும் படகில் செல்வதும் ஒன்றுதான் என்று சொல்லாமல் விட்டாரே...! இல்லையெனில் தமிழக அரசையும் சீண்டிப் பார்த்து தானும் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரத்தை இட்டிருப்பார். அட ஆமாம்..! அரசியல் நடிகர்களுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன..?
