‘கிறிஸ்துமஸ் படங்களில் ஒரே ஹிட் படம் ‘கனா’தான். ஆனால் ஆளாளுக்கு சக்சஸ் மீட் நடத்துகிறார்கள்’ என்று தனுஷையும், ஜெயம் ரவியையும் மரண கலாய் கலாய்த்தார் அப்பட நாயகி ஐஸ்வர்யா.

கிறிஸ்துமஸை ஒட்டி கடந்த 21ம் தேதியன்று 6 படங்கள் ரிலீஸாகின. அதில் நியாயமாக வெற்றிபெற்று வசூலும் குவித்தபடம் ‘கனா’ மட்டுமே. அதன் வெற்றி விழா நேற்று வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. ஆனால் இந்த விழாவுக்கு முன்பே ‘மாரி 2’ என்ற சுமார் ஃப்ளாப் கொடுத்த தனுஷும், ‘அடங்க மறு’ என்ற சூப்பர் ஃப்ளாப் கொடுத்த ஜெயம் ரவியும் சக்சஸ் மீட் நடத்தி முடித்திருந்தனர்.

இதை மறைமுகமாக தனது பேச்சில் சுட்டிக்காட்டிய ஐஸ்வர்யா,’’‘கிரிக்கெட் தெரியாத என்னை இந்த படத்திற்காக பயிற்சி கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் அருண்ராஜாவுக்கும், என்மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி.

இந்த படத்தில் நடித்ததில் என் அம்மாவுக்கு பெரிய மகிழ்ச்சி. படத்தை பார்த்த பிறகு இந்த படத்துக்கு பிறகு நான் நடிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை என்றார். இதுதான் உண்மையான வெற்றி. நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுவார்கள். இந்த விழா அப்படி இல்லை. இது உண்மையான வெற்றி விழா’ என்றார். அவரது துணிச்சலுக்கு தன்னை மறந்து கைதட்டி ரசித்தனர் பத்திரிகையாளர்கள்.