நடிகர் யாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எவ்வளவு காலமானாலும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என பட்டென சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
கன்னட திரையுலகின் பிரம்மாண்டமான கே.ஜி.எஃப் படத்தின் வெற்றி ஓட்டுமொத்த திரையுலகையும் வாய் பிளக்க வைத்தது. 2018ம் ஆண்டு கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கேஜிஎப் சாப்டர் 2 எடுக்கப்பட்டது.

யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனைகளையும் செய்தது. மேலும் வரும் ஜூலை 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா 2வது அலையால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் செப்டம்பர் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் முன்னணி ஓடிடி தளம் ஒன்று கே.ஜி.எஃப் 2 படக்குழுவினரை தொடர்பு கொண்டு, 250 கோடி ரூபாய்க்கு படத்தை விலைக்கு கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் நடிகர் யஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எவ்வளவு காலமானாலும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என பட்டென சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நடிகர் யாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய நிச்சயமற்ற நிலையால் முடிவுகள் தாமதப்படுவதாகவும், நாங்கள் வாக்களித்த படி ஏப்ரல் 14ம் தேதி கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும்” என்றும் பதிவிட்டுள்ளார்
