‘ரெண்டாயிரத்துச் சொச்சம் மெம்பர்களே உள்ள நடிகர் சங்கத்துக்கு இவ்வளவு கேமராக்களும் இத்தனை பத்திரிகையாளர்களும் தேவையா? நாட்டில் நடக்கும் வேறு பல்ல நல்ல விசயங்களை கவர் செய்யலாமே?? என்று பத்திரிகையாளர்களிடம் செல்லமாகக் கடிந்துகொண்டார் நடிகர் விவேக்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து நடிகர்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. ரஜினி மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் வாக்களிக்க வரவில்லை. அவருடைய தபால் வாக்கும் தாமதமாகச் சென்றதால் அவருடைய வாக்கு செல்லாததாகிவிட்டது.

எனினும் கமல்,விஜ,விஜய்காந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இன்று வாக்களிக்க வருவார்கள் என்பதால் ஒட்டுமொத்த மீடியாக்களும் சட்டசபை, பாராளுமன்றத் தேர்தல் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து குவிந்துவிட்டன. அதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்த நடிகர் விவேக் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சற்று காட்டமாகவே பேசி அட்வைஸ் செய்தார்.

அப்போது பேசிய அவர்,’நடிகர் சங்கத் தேர்தல் என்பது இரண்டாயிரத்துச் சொச்சம் உறுப்பினர்களுக்காக மட்டுமே நடக்கும் சின்னத் தேர்தல். இதற்கு இத்தனை பெரிய கவரேஜ் தேவையில்லை என்பது என் கருத்து. தமிழகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. தண்ணீர்ப் பஞ்சத்துக்காக மாணவர்கள் பல இடங்களில் ஏரிகளில் தூர் வாருகிறார்கள். இன்னும் சில இடங்களில் நியாயமான விஷயங்களுக்காகப் போராட்டங்கள் நடக்கின்றன. அவற்றுக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தையும் செய்தியாளர்களாகிய நீங்கள் தரவேண்டும்’என்று செவிட்டல் அறைந்ததுபோல் பேசிவிட்டுச் சென்றார் விவேக்.