இயக்குனர், எழுத்தாளர், மேடை நடிகர், திரைப்பட நடிகர், சின்னத்திரை தொகுப்பாளர் என  கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு, தன்னுடைய பன்முக திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் விசு.

இவர் தன்னுடைய மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்கிற பெயரை கொண்ட இவர், திரைப்பிரபலன்களாலும், ரசிகர்களாலும் செல்லமாக விசு என அழைக்கப்பட்டவர்.  இயக்குனர் கே பாலச்சந்தர்ரிடம்  துணை இயக்குனராக பணியாற்றி பின், 'பட்டினப்பிரவேசம்' என்கிற படத்தில் எழுத்தாளராக மாறினார்.

கடந்த 1977ஆம் ஆண்டு தில்லுமுல்லு படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி, பின் கண்மணி பூங்காக்கள், படத்தில் முதல்முறையாக இயக்குனராக தன்னுடைய பயணத்தை துவங்கினார்.

இதையடுத்து மணல் கயிறு, அவள் சுமங்கலிதான், சிதம்பர ரகசியம், போன்ற பல படங்களில் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என தன்னுடைய பன்முகத் திறமையை காட்டி ரசிகர்களின் மனதில்  நீங்காத இடம் பிடித்தவர்.

குறிப்பாக பிரபல தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய அரட்டை அரங்கம் நிகழ்ச்சி  இளைஞர்கள்  மத்தியில் மிகவும் பிரபலம்.  தன்னுடைய எதார்த்தமான பேச்சால் பல முறை இந்த நிகழ்ச்சிக்கு சரியான தீர்வை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர்  கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான மணல் கயிறு 2 என்கிற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக திரையுலகில் இருந்து விலகியிருந்த நடிகர் விசு காலமாகி விட்டதாக பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.வி.சேகர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 50 ஆண்டுகால நண்பரை இழந்து விட்டதாக  மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

 மறைந்த  நடிகர் விசுவிற்கு  72 வயதாகிறது. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவருமே திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.