நீட் தேர்வு முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தவறான முடிவு எடுக்கக் கூடாது என நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. ஆனால் மத்திய அரசின் துரோகத்தால், நீட் தேர்வின் மூலமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்ற தனது கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் சங்க செயலாளரும், நடிகருமாக விஷால், தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டது மிகுந்த மன வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தவறான முடிவு எடுக்கக் கூடாது என்றும் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் மறந்து விடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும் என விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.