Actor vishal : பிச்சை எடுத்தாவது நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்போம் - நடிகர் விஷால் பேச்சு
Actor vishal : சென்னைக்கு வருபவர்கள் சுற்றுலாத் தலங்களை காண்பது போல் நடிகர் சங்க புதிய கட்டிடத்தை பார்த்து செல்லும் அளவுக்கு, கட்டிடத்தை உருவாக்க இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காக கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. இதில் நடிகர் விஷால் தலைமையிலான, பாண்டவர் அணி மீண்டும் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து சென்னை தி-நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் பதவியேற்றனர்.
முன்னதாக நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பொதுச்செயலாளர் விஷால், சென்னைக்கு வருபவர்கள் சுற்றுலாத் தலங்களை காண்பது போல் நடிகர் சங்க புதிய கட்டிடத்தை பார்த்து செல்லும் அளவுக்கு, கட்டிடத்தை உருவாக்க இருப்பதாக தெரிவித்தார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்கு மேலும் 21 கோடி ரூபாய் தேவைப்படுவதால், கவுரவமாக பிச்சை எடுத்தாவது பணிகளை நிறைவு செய்வோம் என அவர் கூறினார்.
அனைவரும் சேர்ந்து தான் கோவில் கட்ட முடியும் என்பதுபோல், நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரையும் நேரில் சந்தித்து நிதி திரட்ட இருப்பதாக பொருளாளர் கார்த்தி தெரிவித்தார். திரைப்படங்களுக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து வரும் தொடர் மிரட்டல்களுக்கு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
நடிகர் சங்க விதிப்படி பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தாங்கள் பொறுப்பில் இருப்போம் என்று துணைத்தலைவர் பூச்சி முருகன் கூறினார். மேலும் நலிந்த கலைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில் மண்டபம் கட்டி தங்கவைக்க திட்டமிட்டு இருப்பதாக பூச்சி முருகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Beast Teaser : ஜாலி மூடில் இருந்து ஆக்ஷனுக்கு மாறும் தளபதி.. சுடச்சுட வருகிறது பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்