‘இதுவரை இப்படி ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடித்தது. ஒரு சண்டைக் காட்சியில் என் சாவை நான் என் கண்ணால் பார்த்தேன்’என்று பெரிய விபத்து ஒன்றிலிருந்து உயிர் தப்பிய அனுபவம் குறித்து சிலிர்ப்பு மாறாமல் பேசினார் விஷால்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா,ஐஸ்வர்யா லட்சுமி,அகன்ஷாபூரி,சாயாசிங்,யோகிபாபு, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ஆக்‌ஷன். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவம்பர் நேற்று நடைபெற்றது.

தமன்னா, அகன்ஷாபூரி, சாயாசிங், சாரா, ஹிப்ஹாப்தமிழா ஆதி, இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது,’இந்தப்படத்தை இவ்வளவு பெரிய செலவு செய்து தயாரித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்காக எல்லோரும் ஒருமுறை கைதட்டுங்கள். ஏனெனில் இந்தப்படத்தின் வியாபாரம் இவ்வளவுதான் என்று கணக்குப் போடாமல் படத்துக்குத் தேவையான அளவு செலவு செய்திருக்கிறார்.இந்தப்படத்துக்கு 55 கோடி செலவாகியிருக்கிறது.

இந்தப்படத்தில் நடித்த போது, சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி.
‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவுத் திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்‌ஷன்’தான்.ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டது. அப்போது, 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்காமல் போகுமே என்கிற எண்ணம் வந்தது, ஆனால் கடவுள் அருளால் அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.

எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும்.அவரிடம் நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்த பிரசாத் லேப் அரங்கையே இலண்டன் மாநகரின் பெரிய கட்டிடம் போல் காட்ட அவரால் முடியும்.சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது.இதில் டூப் போட்டுக் கொள்ளலாம் என்று தமன்னா சொல்லியிருக்கலாம். ஆனால் அவரே ஈடுபாட்டுடன் சண்டைக் காட்சிகளில் நடித்தார்’என்றார் விஷால்.