கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்து. அதையடுத்து துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் பங்கேற்றார் விஷால், அதிலும் பட்ஜெட்டுக்கு மீறி செலவு செய்ததாக கூறி மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் இடையே பிரச்சனைகள் வெடித்தது. இதையடுத்து அந்த படத்திலிருந்து மிஷ்கின் விலக, மீதமிருந்த படத்தையும் தானே இயக்குவதாக விஷால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக லண்டனில் நடைபெற்று வந்த அந்த படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 

அதையடுத்து இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் சக்ரா படத்தில் விஷால் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

ஆன்லை மோசடி குறித்து தயாராகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகி வைரலானது. தனது தந்தையின் அசோகச் சக்கர பதக்கத்தை தேடிக் கண்டுபிடிக்கும் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார். மீண்டும் விஷால் ராணுவ வீரராக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள விஷால், சக்ரா படம் தீபாவளிக்கும் ஓடிடி-யில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளார். 

இன்னும் சில நாட்களில் மீதமுள்ள படப்பிடிப்புகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த தீபாவளிக்கு சக்ரா திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.