கை நடுக்கம்; மதகஜராஜா விழாவில் தட்டுத்தடுமாறி பேசிய விஷால் - புரட்சி தளபதிக்கு என்ன ஆச்சு?
சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மேடையில் கை நடுக்கத்தோடு பேசியது காண்போரை கலங்க வைத்துள்ளது.
மத கஜ ராஜா ரிலீஸ்
ஒரு படம் 5 ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டாலே அதற்கு சோலி முடிஞ்சது என பேசத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் 12 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆக உள்ள ஒரு படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பது படக்குழுவையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அது வேறெதுவுமில்லை, சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மத கஜ ராஜா படம் தான். கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் தற்போது தான் ரிலீஸ் ஆக உள்ளது.
மத கஜ ராஜா டீம்
மத கஜ ராஜா திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர் சந்தானம், பாலிவுட் நடிகர் சோனு சூட், குணச்சித்திர நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில் நடிகர் ஆர்யாவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ரிச்சர்டு எம் நாதன் மேற்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... மத கஜ ராஜா படத்தின் 12 வருட பிரச்சனை திடீரென முடிந்தது எப்படி? காரணம் இவரா?
பொங்கலுக்கு கன்பார்ம்
மத கஜ ராஜா திரைப்படம் 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் பல முறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து விலகியதும் மதகஜராஜா பொங்கல் வெளியீடு என அறிவிப்பு வெளியானதும், பலரும் இப்படம் வழக்கம்போல் இந்த ஆண்டும் தள்ளிப்போகும் என நினைத்தனர். ஆனால் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்த வருடம் கன்பார்ம் ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழுவே உறுதி செய்துவிட்டது.
மத கஜ ராஜா பிரஸ் மீட்
அதன் ஒரு பகுதியாக அப்படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சுந்தர் சி, நடிகர் விஷால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது படம் இத்தனை ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் ஆவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் பயமாகவும் இருந்தது என கூறிய இயக்குனர் சுந்தர் சி. ஆடியன்ஸ் இப்படத்தின் ரிலீஸ் பற்றி அறிந்ததும் கொடுத்த பாசிடிவ் ரெஸ்பான்ஸ் தங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக கூறி உள்ளார்.
விஷாலுக்கு என்ன ஆச்சு?
மேலும் நேற்று நடைபெற்ற பிரஸ் மீட்டில் நடிகர் விஷால், மேடையேறி பேசியபோது, கைகள் நடு நடுங்க, தள தளத்த குரலில் பேசினார். இதைப்பார்த்த ரசிகர்கள் விஷாலுக்கு என்ன ஆச்சு என இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் வைரல் காய்ச்சல் உடன் நேற்றைய பிரஸ் மீட்டில் கலந்துகொண்டாராம். படம் 12 ஆண்டுக்கு பின் ரிலீஸ் ஆக உள்ளதால் அந்த விழாவை புறக்கணிக்க கூடாது என்கிற நோக்கத்தில் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டிருக்கிறார் விஷால். இந்த காலகட்டத்தில் தன் பட புரமோஷனுக்கு வர மாட்டேன் என அடம்பிடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், காய்ச்சலுடன் வந்து மதகஜராஜா பிரஸ் மீட்டில் விஷால் கலந்துகொண்டதை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல் அவர் தன் உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விஷாலின் விடாமுயற்சியால் 12 வருட காத்திருப்புக்கு பின் ரிலீசாகும் மத கஜ ராஜா!