மத கஜ ராஜா படத்தின் 12 வருட பிரச்சனை திடீரென முடிந்தது எப்படி? காரணம் இவரா?
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மத கஜ ராஜா திரைப்படத்தின் வெளியீட்டு பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ள நிலையில், அதன் பின்னணியில் இருந்தது யார் என்பதை பார்க்கலாம்.
Madha Gaja Raja
சினிமாவில் ஒரு படத்தை முழுமையாக எடுத்து முடித்து திரைக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எந்த நேரத்தில் என்ன சிக்கல் வரும் என்பதே தெரியாது. அப்படி தான் அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரீமேக் உரிமை வாங்குவதில் பிரச்சனை வந்ததால் அப்படத்தை தள்ளிவைத்துவிட்டனர். அஜித் போன்ற முன்னணி நடிகரின் படத்துக்கே இந்த நிலைமை என்றால் சின்ன படங்களில் கதியை யோசித்து பாருங்கள்.
Madha Gaja Raja Movie Stills
விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து விலகியதால் அதற்கு பதிலாக பொங்கல் வெளியீட்டில் களமிறங்கிய படங்களில் நடிகர் விஷாலின் மத கஜ ராஜா திரைப்படமும் ஒன்று. கடந்த 2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருந்த இப்படம் சில பிரச்சனைகளால் கடந்த 12 வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கியே கிடந்தது. இத்தனை வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த மத கஜ ராஜா படத்தின் பிரச்சனை தற்போது திடீரென முடிவுக்கு வந்தது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.
Madha Gaja Raja Movie Release Date
மத கஜ ராஜா படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் 2013ல் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. விஜய்யின் நண்பன் படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்தது. அதன்பின்னர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தை தயாரித்ததன் மூலம் நஷ்டத்தை சந்தித்த இந்நிறுவனம் அப்படத்தின் தோல்வியில் இருந்து மீள முடியாததால் அதன் பின் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. மத கஜ ராஜா படத்தின் ரிலீஸ் சிக்கலுக்கு கடல் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் தான் காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விஷாலின் விடாமுயற்சியால் 12 வருட காத்திருப்புக்கு பின் ரிலீசாகும் மத கஜ ராஜா!
Madha Gaja Raja Heroines
மத கஜ ராஜா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் 15 முதல் 16 கோடி தேவைப்பட்டதாம். அந்த காலகட்டத்தில் அது மிகப்பெரிய தொகை என்பதால் அப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். ஆனால் தற்போது அந்த தொகை ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமையை விற்றாலே கிடைத்துவிடும் என்கிற நிலைமை உள்ளது. அதுமட்டுமின்றி மார்க்கெட்டும் விரிவடைந்துள்ளதால் இந்த படத்தை வெளியிடும் பொறுப்பை திருப்பூர் சுப்ரமணியம் ஏற்றிருக்கிறாராம்.
Madha Gaja Raja Pongal Release
யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டுமோ அவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு, கொடுக்க வேண்டிய பணத்தில் பாதியை தற்போது தருவதாக டீல் பேசி சம்மதம் வாங்கி இருக்கிறாராம். இதனால் 8 கோடி இருந்தாலே படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்கிற நிலைக்கு கொண்டு வந்து அதற்கான பொறுப்பையும் அவர் ஏற்றிருகிறாராம். கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம்.
Madha Gaja Raja Release Date
பின்னர் சரியான ரிலீஸ் தேதி கிடைத்தால் வெளியிட்டு விடலாம் என்கிற திட்டத்தில் இருந்த அவர்களுக்கு விடாமுயற்சி படம் விலகியதும் இதைவிட சரியான தேதி கிடைக்காது என முடிவெடுத்து உடனடியாக ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு குடும்பங்கள் கொண்டாடும் படமாக மத கஜ ராஜா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சி விலகியதும் விறுவிறுவென பொங்கல் ரேஸில் குதித்த 10 படங்கள் - முழு லிஸ்ட் இதோ