கடந்த முறை நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்ட விஷால் அணியினர் வெற்றி பெற்றனர். இதையடுத்து இரண்டு சங்கத்திற்கும் விஷால் தலைவரானார். இதையடுத்து விஷால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனிடையே தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. அதையடுத்து சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது.

திரைப்பட தயாரிப்பாளார்கள் சங்கத்திற்கு வருகிற ஜூன் 21ம் தேதி தேர்தலை நடத்துவது என தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள்  தொடங்கப்பட்டன. எனினும் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீக்க கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும், அதுதொடர்பான அறிக்கையையும் அக்டோபர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க 3 அணிகள் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், 4வது அணியாக விஷால் போட்டியிட உள்ளாராம். அதற்காக கடந்த முறை தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டவர்களுடன் களம் இறங்க முடிவு செய்துள்ளாராம்.