சமுதாயத்தில் பெண்களை தான் அதிக அளவில் மதிப்பதாகவும், எனவே சமக வலைதளங்களிலிலோஇ வேறு வகையிலோ பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று நடிகர்  விஜய்  தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அண்மையில்  பத்திரிக்கையாளரான தன்யா ராஜேந்திரன்,  ஷாருக்கானின் படத்தை டுவிட்டரில் விமர்சனம் செய்யும்போது, விஜய்யின் சுறா படம் எவ்வளவோ மேல் என்று கூறியிருந்தார்.

இதைக் கண்டித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்தும், கொலை மிரட்டல் விடுத்தும் 3 நாட்களில் 35 ஆயிரம் பதிவுகளையும்  அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து தன்யா, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விஜய் ரசிகர்கள் இருவர் மீது வன்கொடுமை, பெண்களை தவறாக பேசுவது, சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமுதாயத்தில் பெண்களை தான் அதிக அளவில் மதிப்பவன் என்றும் பெண்கள் குறித்து இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சனம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள விஜய், யாருடைய படத்தையும் யாரும் விமர்சனம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

எக்காரணம் கொண்டும், பெண்களை சமூக வலைதளத்தில் யாருடைய மனதும் புண்படும்படி தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்  என்றும் விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.