தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலேயே அதிகம் பிசியாக, தூங்க கூட நேரம் இல்லாமல் பயங்க பிசியாக இருந்து வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி தான். இவர் தற்போது அவரின் குருவான சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அவர் கேரளா பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் கல்வியில் முன்னேற்றமும், காதல் திருமணம் செய்வதும்தான் சிறந்த வழி. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எந்தத் துறையில் இருந்தாலும் தவறு. #METOO மூலம் பெண்கள் கூறிய பாலியல் புகார்களால் தவறு செய்தவர்கள் பயத்தில் உள்ளனர். பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார்.

சபரிமலை விவகாரம் குறித்து பேசிய அவர், “நான் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மிகப்பெரிய ரசிகன். சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயனின் முடிவு சரிதான். இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் வருகிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியாகக் கேரள அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டது. அதற்கான எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விஜய் சேதுபதிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால்,  ஜெயராம் நடிக்கும் மார்கோனி மாதாய் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.