சினிமாவோ,  சீரியலோ அல்லது டிவி ஷோக்களோ எதுவாக இருந்தாலும் ஒருவர் நன்றாக நடித்திருந்தால் அவரை அழைத்து பாராட்டுவதில் நடிகர் விஜய் சேதுபதியை மிஞ்ச யாரும் இல்லை என்றே சொல்லலாம். அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது கலக்கப் போவது யாரு? சீசன் 7 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் அன்சார் மற்றும் அமர் ஜோடி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்கள். இவர்களது நகைச்சுவையும், நடிப்பும் ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதியன்று ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு  நிகழ்ச்சியில் ரத்தக் கண்ணீர் நாடகத்தில் நடித்த எம்.ஆர்.ராதா போன்று வேடமணிந்து அன்சார் நடித்தார்.

இந்த நடிப்பை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அன்சாரின் நடிப்பை நடுவர்களும் பாராட்டி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி, உடனடியாக  விஜய் தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்டு அன்சாரின் தொலைபேசி எண்ணை வாங்கி அவரின் நடிப்பை பாராட்டி  புகழ்ந்துள்ளார்.

இதனால் நெகிழ்ந்து போன அன்சார், எனக்கொல்லாம் பாராட்டா ? எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, நான் சினிமாவில் இருக்கேன்…நீங்க தொலைக்காட்சியில் இருக்கீங்க..  எங்கிருந்தாலும் நடிப்பது என்பது  ஒன்றுதான்…நீங்களும் ஒரு நல்ல உயரத்தை எட்டிப் பிடிக்க வாழ்த்துக்கள் என பாராட்டியுள்ளார்.

இதை நேற்று  ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அன்சார் தெரிவித்தபோது அங்கிருந்த அனைவரும் விஜய் சேதுபதியின் நல்ல மனதைப் பாராட்டினர்.