கொரோனா நிதியாக ரூ.1.30 கோடிகளை வாரி வழங்கிய நடிகர் விஜய் அடுத்த அதிரடியாக வறுமையில் வாடுபவர்களுக்கு வங்கிக்கணக்கில் பணத்தை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். 

ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழிலாளர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பலரும் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் 1.30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். இதனையடுத்து தனது மக்கள் மன்றம் மூலம் தொடர்ச்சியாக உதவிகளை வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகவே பணம் அனுப்பி வைத்து வருகிறார். யாரெல்லாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற விவரத்தை அவருடைய மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் ஏற்கெனவே விஜய் கணெகெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

மத்திய சென்னை விஜய் நற்பணி மன்றத் தலைவர் பூக்கடை குமாரிடம் அவருடைய ஏரியாவில் கஷ்டப்படும் ரசிகர்களின் லிஸ்டை எடுத்துக் கொடுத்துள்ளார்.  மோகன் என்கிற இளைஞர் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை விஜய்க்கு அனுப்பி வைத்துள்ளார். மோகனின் வங்கிக் கணக்கிற்கு 'விஜய் அறக்கட்டளை' வங்கிக் கணக்கிலிருந்து 10,000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சாப்பாடு, அத்தியாவசியப் பொருட்களை தனது மக்கள் மன்றம் மூலமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளார். யாரும் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் என்றும், மாநிலத் தலைவர்கள் மூலமாக என்ன செலவு என்று கூறினால் அதை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பி வைக்கிறேன் என வாக்குறுதி அளித்திருக்கிறாராம் விஜய்.