இளைய தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவும்,  தயாரிக்கவும் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

கோடிக்கணக்கில் பட்ஜெட் ஆனாலும் அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் விஜய் படம் என்றால் எவ்வளவு செலவு செய்யவும் துணிகின்றன பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள். 

இந்நிலையில் விஜய்யே வலியவந்து படம் இயக்க சொல்லியும் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், அதை மறுத்துள்ளார். இந்த செய்தியை அவரே தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

நடிகர், பார்த்திபன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், பெரிய நடிகர்களை வைத்து ஏன் படம் இயக்குவது இல்லை என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.  இதற்கு பதிலளித்த பார்த்திபன் தனக்கு நடிகர் விஜய்யை வைத்து '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட 'நண்பன்' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த வாய்ப்பை  நான் இயக்க வேண்டும் என விஜய் ஆசையோடு கூறியும், அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

பின் இந்த வாய்ப்பு இயக்குனர் ஷங்கரிடம் சென்றதாகவும் கூறியுள்ளார். 

மேலும் விஜயை வைத்து இப்படிப்பட்ட படத்தை இயக்க நான் விரும்பவில்லை என்றும், அவரை வைத்து எடுக்கும் படம் வேறு மாதிரியான படமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.  எனவே இந்த படத்தை இயக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை.  ஆனால் கண்டிப்பாக விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.