புதுச்சேரியில் பல்லாயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் கூடிய நிலையிலும் பாதுகாப்பு பணிக்கு ஒரு போலீஸ் கூட வராததன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நடிகர் விஜயின் அகில இந்திய ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். இவரது மகன் திருமணம் புதுச்சேரியில் நேற்று முன்தினம் காலையில் நடைபெற்றது. இரவு புதுச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள பிரமாண்ட திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் வர உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

இதனை அடுத்து புதுச்சேரி நகர் முழுவதும் விஜயை வரவேற்று அவரது ரசிகர்கள் ஏராளமான பேனர்கள் கட்டினர். வழிநெடுகிலும் விஜய் மக்கள் இயக்க கொடிகளும் பட்டொளி வீசி பறந்தது. விஜய் புதுச்சேரிக்கு வருகை தரும் தகவலை அறிந்து அருகாமையில் உள்ள கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலை முதலே ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். இரவு சுமார் ஏழு மணி அளவில் நடிகர் விஜய் திருமண மண்டபத்திற்கு வருகை தந்தார். அங்கு ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். விஜயை பார்த்ததும் ரசிகர்கள் முண்டி அடித்துக் கொண்டு ஓடினர்.

 

இதனால் விஜய் காரில் இருந்து இறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கார் கல்யாண மண்டபத்தின் பக்கவாட்டு வழியாக உள்ளே நுழைந்து மேடைக்கு பின்புறமாக சென்றது. அங்கிருந்த விஜயை பெரும்பாடு பட்டு அவரது ரசிகர் மன்ற தொண்டர் படை மேடைக்கு அழைத்துச் சென்றது. ஆனால் விஜய் மேடை ஏறியதும் மண்டபத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் முன்னேறிச் சென்றனர். மேலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் விஜயுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று மேடையில் ஏறிக் கொண்டனர். இதனால் விஜயால் மணமக்களின் அருகில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் விஜயின் மனைவி சங்கீதாவை வேறு யாரோ என்று நினைத்து ரசிகர்கள் நெருக்க ஆரம்பித்தனர்.

 

 ஆனால் விஜய் தனது மனைவியை அரவணைத்தபடி நீண்ட நேரம் போராடி மணமக்கள் அருகில் சென்று வாழ்த்திவிட்டு பரிசு கொடுத்துவிட்டு புறப்பட்ட ஆயத்தமானார். ஆனால் அதற்குள் மேடை முழுவதும் ரசிகர்கள் ஏறி இருந்தனர். இதனால் விஜயால் அங்கிருந்து நகரக்கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் தொண்டர்படை ரசிகர்களை மூர்க்கத்தனமாக தள்ளிவிட்டு விஜயை காருக்கு அழைத்துச் சென்றனர்.

 ஆனால் விஜயின் காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் காரும் வெளியேற முடியவில்லை. பின்னர் ரசிகர் மன்ற பொருப்பாளர் புஸ்ஸி ஆனந்தே அங்கு ஓடி வந்து ரசிகர்களை மிரட்டி ஓரம்கட்டி விஜயை அனுப்பி வைத்தார். இதனிடையே ரசிகர்கள் முண்டியடித்த போது படியில் தடுமாறிய விஜய்க்கு காலில் லேசான ரத்தம் காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடைய இவ்வளவு ரசிகர்கள் திரண்ட நிகழ்வில் ஒரு போலீஸ்காரரை கூட காண முடியவில்லை.

இது குறித்து விசாரித்த போது விஜய் வருவதாக கூறி புதுச்சேரி போலீசாரை புஸ்ஸி ஆனந்த தரப்பினர் அணுகியுள்ளனர். மேலும் பாதுகாப்புக்கு போலீசார் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். ஆனால் புதுச்சேரி மாநில பா.ஜ.கவினர் சிலர் தலையிட்டு விஜய்க்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்காமல் தடுத்துவிட்டதாக கூறுகின்றனர். மெர்சல் படத்தில் மத்திய அரசுக்கு எதிராக வசனங்கள் பேசிய விஜய்க்கு எப்படி நாம் பாதுகாப்பு கொடுக்கலாம் என்கிற சில பா.ஜ.க தலைவர்களின் ஆதங்கமே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும் கூட, போலீசார் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.