நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி காலமானார்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீசன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது சகோதரர் ஜெகதீசன், கல்லீரல் செயலிழந்ததன் காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 55. தம்பியின் மரணத்தால் வடிவேலு உள்பட அவரது குடும்பத்தினரே சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர், இதுதவிர அவருக்கு இரண்டு தங்கைகளும் உண்டு. சினிமாவில் தான் பிரபலமாகி சம்பாதிக்கத் தொடங்கியதும், தன் உடன் பிறந்தவர்களை நன்கு பார்த்துக் கொண்டதோடு அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து வடிவேலு அழகு பார்த்ததாக அவருடைய தம்பி ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... "உலக நாயகனை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் வீரப்பன்" - உடல் நலக்குறைவால் காலமானார் - மனம் நொந்து கமல் போட்ட பதிவு
அந்த அளவுக்கு குடும்பத்தினர் மீது பாசம் கொண்டவராக இருந்துள்ளார் வடிவேலு. அவரின் குடும்பத்தில் தற்போது அவரது சகோதரர் மரணமடைந்து இருப்பது வடிவேலுவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. வடிவேலுவின் சகோதரர் ஜெகதீசன் மதுரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இவர் டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்திலும் நடித்துள்ளார்.
அப்படத்தோடு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜெகதீசன், பின்னர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெகதீசன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் குடும்பத்தினர் அஞ்சலிக்காக விரகனூரில் வைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... கன்னடத்துப் பைங்கிளி.. புகழின் உச்சம் தொட்ட நடிகை - ஆனா அந்த தமிழ் ஹீரோவோடு ஜோடியாக நடித்ததேயில்லை தெரியுமா?