கடந்த மார்ச் மாதம் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் அவசர அவசரமாக இணைந்து சீட்டும் வாங்கித் தோற்ற நடிகை ஊர்மிளா மடோன்கர், இன்று தனது அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அத்தனையையும் உதறி எறிந்து கட்சியை விட்டு வெளியேறினார்.

கமலின் மலையாளப்படமான சாணக்கியனில் கதாநாயகியாக அறிமுகமாகி, ஷங்கரின் இந்தியனில் இந்தியா முழுக்கப் பிரபலமாகி, ராம்கோபால் வர்மாவின் ரங்கீலாவில் உலகம் முழுக்கப் புகழ் பெற்ற நடிகை ஊர்மிளா மடோன்கர். மும்பையில் வசித்து வரும் கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் திடீரென காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கட்சியில் இணைத்துக்கொண்டார். வழக்கமான அரசியல்வாதிகள் சீட்டுக்காக கட்சியில் சேரவில்லை என்று அவர் பேட்டி அளித்தாலும் கூட, அவருக்கு மும்பையில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டு பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் இன்று திடீரென தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாகத் தலைமைக்குக் கடிதம் அனுப்பிய அவர்,’தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் கட்சிக்கு வரவில்லை என்றும் உள்கட்சிச் சண்டைகள் தனது நேரத்தை அநியாயமாக வீணடிப்பதாலேயே தான் ராஜினாமா செய்திருப்பதாகவும், பொது மக்களுக்கு தொண்டு செய்யும் அந்த எண்ணத்திலிருந்து இனி என்றைக்கும் பின் வாங்கப்போவதில்லை என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.