மலையாள திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் தமிழில் கூட நடிகர் தனுஷுக்கு வில்லனாக மாரி 2 படத்தில் நடித்திருந்தார். கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.  இதையடுத்து டொவினோ தாமஸ் நடித்து வந்த கள படத்தின் ஷூட்டிங்  எர்ணாகுளம் அருகேயுள்ள பிறவம் என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. 


கடந்த 7ம் தேதி இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, டொவினோவின் வயிற்றில் வில்லன் எட்டி உதைப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது சண்டைக் கலைஞர் நிஜமாக மிதித்ததில் டொவினோவின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. இதனால்  டொவினோ தாமஸின் வயிற்றுப் பகுதியில் பயங்கர வலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு  அவரை பரிசோதித்து பார்த்ததில் ஒரு நரம்பு அறுந்து உள் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டொவினோ தாமஸ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 

சில தினங்களுக்கு முன்பு கூட மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், டொவினோ தாமஸ் எங்கள் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 7ம் தேதி காலை 11.15 மணிக்கு டொவினோ தாமஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடும் வயிற்று வலி இருந்ததால், சிடி ஆஞ்சியோகிராம் எடுத்தோம். அதில் அவருக்கு வயிற்றுக்குள் குடலைச் சுற்றியுள்ள கொழுப்புச்சத்தில் ரத்தக்கட்டு இருப்பது தெரியவந்தது. 

ஆனால் அவருக்கு ரத்தப்போக்கு இல்லை என்பதால் 48 மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு ஆண்ட்டிபயாடிக் மூலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் டொவினோ உடல் நிலை சீராக உள்ளது, மீண்டும் ரத்தப்போக்கு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. தற்போது வரை அவருடைய உடல் நிலை திருப்திகரமாக உள்ளது. அவரது உடல் நிலை மோசமடைந்தால் உடனடியாக அவருக்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் என குறிப்பிட்டிருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

 

இதையும் படிங்க: தனுஷுக்கு ‘நோ’சொன்ன சாய்பல்லவி... சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் தவறவிட்ட வாய்ப்பு...!

இந்நிலையில் அபாய கட்டத்தைத் தாண்டிய டொவினோ தாமஸ் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின் படி 3 வாரத்திற்கு டொவினோ தாமஸ் ஓய்வில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்களாம். எனவே அதன் பின்னர் தான் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.