actor surya speech in function

நடிகர் சிவகுமார், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார்.

இந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் சூர்யா..
"கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச் சொல்றோம். 50 வயசுக்குப் பிறகு இப்படி இருந்திருக்கணுமோ என்று யோசிக்காமல், அப்படி வாழ்ந்தவர்கள் சொல்வதை புரிந்துக் கொள்ள வேண்டும். எதற்காக ஓடணும், பணம் சம்பாதிக்கணும் என்று கேள்விக்கெல்லாம் இந்த விழாவைத் தான் பதிலாக பார்க்கிறேன். சில மாணவர்களுடைய பேச்சைக் கேட்கும் போது தான், நாம் இன்னும் நிறையப் பண்ணனும் என்று ஓட வைக்குது. பல மாணவர்களுடையப் பேச்சு தான் உத்வேகத்தைக் கொடுக்கிறது. 

அகரம் இப்படியொரு நிலைக்கு வரும் என எதிர்பார்க்கவில்லை. 2500 மாணவர்கள் இந்தாண்டு தொடர்கிறது. 1979-ல் ஒருவருடைய சின்ன எண்ணத்தால், இப்போது தமிழக மக்களின் பலருடைய ஆசிர்வாதம் கிடைக்கிறது. விளையாட்டு மற்றும் அறிவியல் சார்ந்து அடுத்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்பதை அகரம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வியில் எங்கோ பின் தங்கிட்டோமோ, கல்வித்தரம் சரியா இல்லையோ என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லாத்தையும் தாண்டி நான் படித்தே தீருவேன், ஆகியே தீருவேன் என்ற வைராக்கியமிருந்தால் எதுவுமே தடை கிடையாது. இதுக்கு உதாரணமாக நம்முன் பலர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைந்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக் கொண்டால் நிச்சயமாக அந்த இலக்கை அடைந்தே தீருவீர்கள். 

நான் இந்த மேடையிலிருக்கும் அளவுக்கு வளர்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. 1997-ல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பாவின் ஆசிர்வாதத்தால் நானும் தமிழ்நாட்டில் நடிகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறேன். எனது ஆரம்பம் இடத்தை யோசித்துப் பார்த்தால், எப்படி இந்த இடத்துக்கு வந்தேன் என்று பயமாக இருக்கிறது. பாரதியார் கவிதைகள், நண்பர்களின் ஊக்கம், இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவராலும் மட்டுமே இந்த இடம் கிடைத்திருக்கிறது. 

அந்த இடத்தைத் தாண்டி, அகரம் மூலமாக செய்து வரும் உதவிகளை உயர்வாகப் பார்க்கிறேன். நடிகராகப் பார்ப்பதை விட, அகரம் மூலம் ஏதோ செஞ்சுட்டு இருக்கேன் என்பதை பல மடங்கு உயர்வாக பார்க்கிறேன். அது தான் பெரிய நிறைவு கிடைக்கிறது. வீட்டில் அப்பா - அம்மாவுக்கு, குழந்தைகளுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் பண்ணியாச்சு. இனிமேல் நினைக்கிற, பண்ற ஒவ்வொரு விஷயமும் அகரமுக்காக மட்டுமே இருக்கணும் என்பது என் ஆசை. அகரம் மூலமாக செய்ய வேண்டியது கடல் அளவுக்கு இருக்கிறது. அதை செய்வதற்கு யாரை எல்லாம் பார்க்க வேண்டுமோ, எந்த கதவுகளை எல்லாம் தட்ட வேண்டுமோ அனைத்துமே தட்டப்படும். 

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அகரத்தில் இருப்பவர்கள் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வரை அண்ணாக்களாகவும், அக்காக்களாகவும் கூடவே இருப்பார்கள். உதவிக் கேட்டு வருபவர்களை விட, அகரத்தில் போய் தேடிப் பிடித்து படிக்க வைக்கிற மாணவர்கள் அதிகம். கிராமப்புறத்திலுள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய சப்போர்ட் தேவைப்படுது. நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது" என்று மிகவும் உணர்ச்சிவசமாக பேசினார்