‘அசுரன்’படத்தின் மாபெரும் வெற்றியால் இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குநர் ஆகியிருக்கும் நிலையில் அவர் இயக்கத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா பல பல்டிகள் அடித்துவருவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. இதனால் வெற்றிமாறன் பரோட்டா சூரியை கதநாயகனாக்கும் பட முயற்சியை கைவிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 4ம் தேதி ரிலீஸான தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியின் ‘அசுரன்’பல தமிழ் சினிமா ரெகார்ட்களை முறியடித்து சூப்பர்ஹிட் படமாக மாறியுள்ளது. தமிழகமெங்கும் தயாரிப்பாளர் எஸ்.தாணுவே சொந்தமாக ரிலீஸ் செய்துள்ள வகையில் அவருக்கு ரூ 30 கோடிவரை லாபம் கிடைக்க வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறது. இதனால் இயக்குநர் வெற்றிமாறனின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்துள்ளது. அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதை மறைமுகமாக உணர்த்தவே கமல் கூட இப்படத்தை பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் தனது நட்பு வட்டாரத்தில் உள்ள அத்தனை தயாரிப்பாளர்கள் மூலமும் தொடர்ந்து தூதுவிட ஆரம்பித்துள்ள சூர்யா, தனது சொந்த நிறுவனத்திலும் தயாரிக்கத் தயாராக இருப்பதாகவும் அதற்காக அவர் எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் தர ரெடி என்றும் தெரிவித்துள்ளார். விஸ்வாசம்’ சிவா தன்னைக் கைவிட்டுவிட்டு ரஜினி படம் இயக்கப்போனதால் நொந்துபோயுள்ள சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்தால் அதை சரிக்கட்டி விடலாம் என்று நினைக்கிறாராம். இது குறித்து வெற்றிமாறன் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் இதனால் பரோட்டா சூரியை நாயகனாக வைத்து அவர் இயக்கவிருந்த படம் கொஞ்சம் தள்ளிப்போகலாம் அல்லது இல்லாமலே கூட போகலாம் என்று தெரிகிறது.