போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த், போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Actor Srikanth Confession in Drug Case : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு உள்ளார். ஸ்ரீகாந்தை வைத்து தீங்கிரை என்கிற திரைப்படத்தை தயாரித்த பிரசாத் என்பவர் தன்னுடைய நண்பரான பிரதீப் மூலம் பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் வாங்கி வந்து அதை ஸ்ரீகாந்துக்கு வினியோகம் செய்து வந்துள்ளார். அண்மையில் பெங்களூருவில் போதைப்பொருள் வாங்கிவிட்டு சென்னை வந்தபோது நுங்கம்பாக்கம் பகுதியில் பிரதீப் பிடிபட்டார். அப்போது அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைப்பு

பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதி அவரை நுங்கம்பாக்கம் போலீசார் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது. போதைப்பொருள் வாங்கியதற்காக அவர் கூகுள் பே மூலம் பிரசாத்துக்கு பணம் அனுப்பியது தான் ஸ்ரீகாந்தை சிக்க வைத்து உள்ளது. இதையடுத்து போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஜூலை 7ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து நடிகர் ஸ்ரீகாந்தை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதனிடையே தனக்கு ஜாமின் கோரி நடிகர் ஸ்ரீகாந்தும் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. தனது மகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இருக்கிறார் ஸ்ரீகாந்த். ஆனால் சிறப்பு நீதிமன்றத்தில் தான் ஜாமீன் பெற முடியும் எனக் கூறி அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளாராம்.

ஸ்ரீகாந்த் வாக்குமூலம்

இந்நிலையில் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலம் என்ன என்பது வெளியாகி உள்ளது. அதன்படி, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதானதற்கு முன்பு தான் அவரிடம் இருந்து 250 கிராம் கொகைன் பாக்கெட் வாங்கினேன். அதைவைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதேபோல் பிரசாத்தை மட்டுமே தனக்கு தெரியும் என்றும் அவர் தன்னை வைத்து படம் தயாரித்துள்ளதாகவும், அதில் தனக்கு தரவேண்டிய 10 லட்சத்தை கேட்டபோது தான் கொக்கைன் கொடுத்து தனக்கு பழக்கிவிட்டதாகவும், பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து போதைப் பழக்கத்தை அதிகப்படுத்தியது அவர் தான் என ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.