Srikanth Net Worth : போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யார் எப்படி சினிமாவிற்கு வந்தார், அவரது சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் ஸ்ரீகாந்த்

Srikanth Net Worth : சினிமாவில் அறிமுகமான போது வரிசையாக எல்லா படங்களிலும் ஹிட் கொடுத்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். அப்படி ஹிட் கொடுக்கவே எல்லோரது பார்வையும் ஸ்ரீகாந்த் பக்கம் திரும்பியது. ஆனால், அதன் பிறகு அவர் நடித்த எல்லா படங்களுமே தோல்வி கொடுக்க சினிமா வாய்ப்பு இல்லாமல் சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

சென்னையில் வளர்ந்தவர்:

சென்னையில் வளர்ந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவருடைய தந்தை ஆந்திரா சித்தூரைச் சேர்ந்தவர். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணியாற்றினார். அம்மா கும்பகோணத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீகாந்தின் குடும்பம் திருப்பதியைச் சேர்ந்தது. அவர் ஹைதராபாத்தில் பிறந்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார். மேலும், தெலுங்கிலும் ஸ்ரீகாந்த் என்ற பெயரில் பிரபலமான நடிகர் இருக்கும் நிலையில் தனது பெயரை தெலுங்கு சினிமாவில் ஸ்ரீராம் என்று பயன்படுத்துகிறார்.

மாடலிங் பணியில் இருந்த ஸ்ரீகாந்த்:

சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக மாடலிங்கில் இருந்த ஸ்ரீகாந்த் அதன் பிறகு நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதன் காரணமாக 2000 ஆம் ஆண்டுகளில் உதவி இயக்குநர்களாக இருந்த வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் ஆகியோரால் நடிப்பு பயின்றுள்ளார். இதைத் தொடர்ந்து கதிரின் காதல் வைரஸ் படத்தில் ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இதற்காக ஒரு வருடம் தன்னை தயார்படுத்திக் கொண்டும் இருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக மற்றொரு புதுமுக நடிகர் ரிச்சர்டு அந்தப் படத்தில் நடிக்க வைக்கப்பட்டார். இதே போன்று ஜீவாவின் 12பி படத்திலும் நடிக்க இருந்தார். ஆனால், அந்தப் படமும் ஷாமுக்கு சென்றது. இதைத் தொடர்ந்து பாரதிராஜா மற்றும் பாலசந்தர் இயக்கிய படங்களிலும் ஸ்ரீகாந்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரோஜா கூட்டம் படத்தில் அறிமுகம்:

அதன் பிறகு தான் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ரோஜா கூட்டம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்தப் படத்தில் நடித்து தான் யார் என்பதை நிரூபித்தார். இந்தப் படம் கொடுத்த வரவேற்பி பிறகு ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு சினேகா உடன் இனைந்து நடித்த ஏப்ரல் மாதத்தில் என்ற படமூம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

ஸ்ரீகாந்த் ஹிட் படங்கள்:

இந்தப் படத்தைத் தொடர்ந்து மனசெல்லாம், பார்த்திபன் கனவு ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால், அதன் பிறகு அவர் நடித்த எந்தப் படமும் பெரிய அளவிற்கு ரீச் கொடுக்கவில்லை. அப்போது தான் விஜய் உடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

ஸ்ரீகாந்திற்கு சினிமா வாய்ப்பு:

இப்போதும் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால், படம் ஹிட் கொடுப்பதில்லை. பெரும்பாலும் ஒவ்வொரு படத்திற்கும் ரூ.50 லட்சம் வரையில் தான் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இவருடைய நிகர சொத்து மதிப்பு என்று பார்க்கும் போது ரூ.15 கோடி வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர ஒரு சில கார்களும் வைத்திருக்கிறார்.