கஜா புயலின் தாக்கத்திலிருந்து இன்னும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முழுமையாக வெளியே வரவில்லை.  ஒரே நாளில் இவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றியது இயற்கை.

கஜாவின் கோரா தாண்டவத்தால், பல்லாயிரம் மரங்கள், மின்சாரக் கம்பங்கள், டவர் கோபுரங்கள், அடியோடு சாய்ந்தது. மேலும் ஆடு மாடுகள் செத்து மடிந்தன, பலர் வீடு மற்றும் உடைமைகளை  இழந்து தற்போதும் தங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு  பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் , நடிகர்கள், மற்றும் தொழிலதிபர்கள், தானாக முன்வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூரியும் தன்னால் இயன்ற உதவிகளை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகிறார். கஜா புயல் தாக்கியபோது டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்வதாக சூரி கூறினார்.

அப்போது இவரிடம் ஒரு பாட்டி கஜா புயலில் தன்னுடைய செல்போன் தொலைந்து விட்டதாகவும், அதனால் தன்னுடைய செல்ல பேரனிடம் பேச முடியவில்லை என கதறி அழுதார். 

இதைக் கண்டு மனம் உருகிப் போன சூரி அந்த பாட்டிக்கு செல் போன் வாங்கி தருவதாக கூறினார். அவர் சொன்னது போலவே தற்போது அந்த பாட்டிக்கு ஒரு செல்போன் வாங்கி அனுப்பியுள்ளார். மேலும் அத்துடன் குறிப்பிட்ட தொகைப் பணத்தையும் அந்த பாட்டியின் செலவுக்காக அனுப்பிவைத்துள்ளார் சூரி. 

இந்த செயலால் அந்த ஊர் மக்கள் நடிகர் சூரியை பாராட்டி வருகின்றனர்.  மேலும் அந்த பாட்டி சூரி வாங்கி கொடுத்த புது போனுடன் எடுத்து கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது. பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நிலையிலும், வயதான பாட்டிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய சூரிக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.