நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு வாக்காளர் பட்டியலில் இடம் இல்லாததால் அவர்கள் வாக்களிக்காமல் திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. வழக்கத்தை விர சற்று அதிகமான வாக்குப் பதிவு சதவிகிதம் என்பதால் இம்முறை பொதுவாகவே வாக்கு சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நகைச்சுவை  நடிகர் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு மட்டுமே  ஓட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால்  அவர் ஒட்டுப்போட செல்லவில்லை.

இதேபோல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் ஓட்டுப்போடுவதற்காக துணை நடிகர் ரோபோ சங்கர் இன்று காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தார். ஆனால் அவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவராலும் ஓட்டுப்போட முடியவில்லை. நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் ஓட்டு இல்லை.தமிழகத்தின் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இல்லை என சிலர் புகார் தெரிவித்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தினால் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என சிலர் விரக்தி அடைந்துள்ளனர்.