நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாரம்பரிய வேளாண் திருவிழாவில், நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரையில் நடிகராக, நிலையான இடத்தை பிடிப்பது பெரிய மலையாக பார்க்கப்பட்ட போது, திறமை இருந்தால் எதுவும் சாத்தியமே என நிரூபித்தவர் சிவகார்த்திகேயன். நிலையான இடத்தை தாண்டி, தற்போது அஜித், விஜய், போன்ற முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்து கெத்து காட்டி வருகிறார்.

நடிகராக உயர்ந்து விட்டாலும், பழமையை மறக்காத சிவகார்த்திகேயன் அவ்வப்போது நலிந்த கலைஞர்கள், கஷ்டப்படும் விவசாயிகள், ஏழை மாணவர்களின் படிப்பு ஆகியவற்றிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அந்த வகையில் ஏழை மாணவியின் மருத்துவ கனவை நினைவாகியது, நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டது, நடிகர் தவசியின் மருத்துவ செலவிற்கு உதவி செய்தது என சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில் இவரது சேவைகளை கௌரவப்படுத்தும் விதமாக இவருக்கு நம்மாழ்வார் விருது கொடுக்கப்பட உள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.