அஜீத் சில வருடங்களுக்கு முன்பே மன்றத்தைக் கலைத்துவிட்டாலும் அவரது ரசிகர் மன்றங்கள் வைக்கும் கட் அவுட் பாலாபிஷேகங்களுக்கு ஒருபோதும் பஞ்சம் இருந்ததில்லை. அதிலும் இம்முறை கூடவே ரஜினியின் ‘பேட்ட’ படமும் வந்ததால் வெறிகொண்டு விளம்பரவேலைகளில் இறங்கி பல வில்லங்கங்களையும் சம்பாதித்தனர்.

இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள தனது காணொலி ஒன்றில் பாலாபிஷேகக் கலாச்சாரத்தை வன்மையாக அதே சமயம் மென்மையாகவும் கண்டித்துள்ளார் நடிகர் சிம்பு.

அவரது பேச்சில் “வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய்ப் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிகப் பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கிப்படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும். அதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட் அவுட்களை வைக்கிறீர்கள்.

ஆனால் இந்த ஒரு முறை மட்டும் பிளக்ஸ், கட் அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம். அது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் போன்றவற்றை வாங்கித்தந்து அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும்.

திரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை தான் காப்பாற்றுவேன். எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும்” என ரசிகர்களுக்கு அன்புக்கட்டளையிட்டுள்ளார் சிம்பு. பாலாபிஷேக மேட்டரை டிக்கெட்டை அதிக விலகொடுத்து வாங்காதீர்கள் என்ற செய்தி அஜீத் வட்டாரத்தை அதிகமாக உலுக்கி இருக்கிறதாம்.