பொதுவாக மனமுதிர்ச்சியற்ற வெட்டிப் பரபரப்புகளில் ஈடுபட்டு வரும் வம்புத்தம்பி சிம்பு இம்முறை ‘பெரியார் குத்து’ என்கிற பெயரில் வீடியோ ஆல்பம் வெளியிட்டு நிஜமான புரட்சித்தம்பி ஆகியிருக்கிறார். வலைதளங்களில் வி.ஐ.பிகளின் ஜாதியைத்தேடி அலையும் அப்டேட்டட் ஜனங்களின் முகத்திரையை பெரியார் கருத்துக்கள் வழியாக இந்த ஆல்பத்தில் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்து, சிம்பு நடனம் அமைத்த ‘பெரியார் குத்து’ ஆல்பத்தை ரெபெல் ஆடியோ நிறுவனம் இன்று (14ம் தேதி) வெளியிட்டுள்ளது. இந்த ஆல்பத்துக்கான பாடலை மதன் கார்க்கி எழுத, ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார்.

 'ராக்கெட் ஏறி வாழ்க்கை போகுறப்போ, சாக்கடைக்குள்ள முங்காதவே..!

சாதிச்சவன் ஜாதி என்னன்னு கூகுள்ல போய் தேடாதவே..!' 

என்று தொடங்கும் இந்தப் பாடல் பெரியாரின் எண்ணங்களைக் பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது. மேலும், அவர் அதிகம் உபயோகிக்கும் ‘வெங்காயம்’ என்ற வார்த்தை இந்த பாடலில் இடம்பெற்றுள்ளது. அத்துடன், ‘கிழவன் சிலைய உடைக்க நினைக்கும் கழுத, என்ன செஞ்சு கிழிக்கும்... உண்மையான நாய் அது நன்றியோட கிடக்கும்... அட வேஷம் போட்டு மானம் கெட்டு குலைக்கும்...

 என்ற வரிகள் சமீபத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளை நினைவு படுத்துகிறது. இந்த ஆல்பத்தில் பாடியுள்ளதை ஒட்டி சிம்புவை நெட்டிசன்கள் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.