சிம்புவை சுற்றி சோதனைகள் சுழன்றடிக்கும் சமயத்தில், அவருடைய ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ் கிடைத்துள்ளது
தமிழ் திரையுலகில் கால்ஷீட் பிரச்சனைகளுக்கு பெயர் போனவர் சிம்பு, சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. இப்படியிருக்க பல கட்ட பஞ்சாயத்துக்குப் பிறகும், நீண்ட இடைவெளிக்குப் பிறகும் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக மாஸ்டர் படத்துடன் போட்டி, போட்டு வெளியானது.

எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய அளவில் படம் வெற்றி பெறவில்லை என்றாலும், உடல் எடையைக் குறைத்து பழைய எனர்ஜியோடு நடிக்க வந்த சிம்புவை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது வெங்கட் பிரபுவுடன் மாநாடு, கெளதம் மேனன் உடன் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் சிம்பு நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே சிம்புவிற்கும், தயாரிப்பாளர்கள் சிலருக்கும் இடையே வெடித்த மோதல் பேசு பொருளாக மாறியுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையை மீறி பெப்சி தொழிலாளர்கள் சிம்பு படத்தில் பங்கேற்றதாக கூறி பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இப்படி சிம்புவை சுற்றி சோதனைகள் சுழன்றடிக்கும் சமயத்தில், அவருடைய ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ் கிடைத்துள்ளது. ஈஸ்வரன் படத்தில் தமன் இசையில் வெளியான பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது, குறிப்பாக மாங்கல்யம் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அந்த பாடல் யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்புவின் பாடல் முதல்முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
