செய்திப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறபோது வி.ஐ.பி.க்கள் யாரையாவது காதலில் மாட்டிவிடுவது இல்லாத கல்யாணத்தைப் பண்ணிவைப்பது, நடிகைகளை கர்ப்பிணியாக்குவது, கோயிங் ஸ்டெடியாக இருப்பவர்களுக்கு விவாகரத்து பண்ணி வைப்பதுதான் இப்போதெல்லாம் பத்திரிகா தர்மம் என்று ஆகிவிட்ட நிலையில் நேற்று சகல மீடியாக்களும் சேர்த்து நடிகர் சிம்புவுக்கு பொண்ணு பார்த்து கல்யாண ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள்.

காலையில் அச்செய்திகளைக் கண்டுகொள்ளாமல் இருந்த சிம்பு மாலை நெருங்க நெருங்க அது சாந்தி முகூர்த்தம் நோக்கிப் போய்க்கொண்டிருந்ததால் சற்று பயந்துபோய் மறுப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில்,...‘என்னுடைய  சினிமா பயணம் மற்றும் ஊடகங்களுடனான பிணைப்பு என்பது நீண்ட காலமானது. என்னுடைய சினிமா வாழ்க்கையைத் தாண்டி ஊடகங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. ஒருவேளை ஊடகங்களின் பங்களிப்பு இல்லாமல் இருந்தால், என்னால் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது சொந்த சகோதரராகவும் மகனாகவும் நினைத்திருக்க மாட்டார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் பாதகமான நிலைக்குச் சென்றிருந்த காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் வந்திருக்கின்றன என்பது வெளிப்படையானது. குறிப்பாக, தற்போது என்னுடைய திருமணம் குறித்து வதந்திகள் நிறைய பரவுகின்றன. தற்போதைக்கு திருமணம் குறித்து எந்தத் திட்டமும் இல்லை என்பதை விளக்கிக்கொள்கிறேன். அப்படி ஒன்று நடந்தால் அதை நான் கண்டிப்பாக உங்களுக்குத்தான் முதலில் தெரிவிப்பேன்.

அதேபோல் என்னுடைய திரையுலக வாழ்க்கை குறித்தும் நிறைய வதந்திகள் பரவுகின்றன. ஒரு சினிமா நடிகனாகப் பல தயாரிப்பாளர்களை, இயக்குநர்களைச் சந்திக்கவேண்டி இருக்கும். அப்படி அவர்களைச் சந்திப்பதாலேயே அவர்களோடு சேர்ந்து படம் நடிக்கவேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. இதையொட்டி வரும் செய்திகளால் என் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள். ஆகையால் கொஞ்ச காலத்திற்கு எனக்கு வதந்திகளில் இருந்து விடுதலை கொடுங்கள்’ என்று பணிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சிம்பு.