பெங்களூருவில் சித்தா பட ப்ரோமோஷன்.. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சித்தார்த் - பரபரப்பு வீடியோ இதோ!
காவிரி நீர் விவகாரம் பெரும் பிரச்சனையாக மீண்டும் உருவெடுத்துள்ள நிலையில், பெங்களூருவுக்கு தனது சித்தா பட ப்ரமோஷன் பணிக்காக சென்ற நடிகர் சித்தார்த், மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த் நடிப்பில் இன்று செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் தான் சித்தா. ஒரு சிறுமிக்கும் அவருடைய சித்தப்பாவிற்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை கூறும் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நடிகர் சித்தார்த் அவர்கள். இந்நிலையில் கன்னட மொழியில் வெளியாகவிருக்கும் சித்தா திரைப்படத்திற்காக ப்ரமோஷன் பணிகளை மேற்கொள்ள அவர் பெங்களூரு சென்றிருந்தார்.
ஏற்கனவே தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே நடந்து வரும் காவிரி பிரச்சனை காரணமாக, மேடையில் நடிகர் சித்தார்த் பேசிக் கொண்டிருந்த பொழுது, அங்கே உள்ளே நுழைந்த சில கன்னட அமைப்பினர், தமிழ் படத்திற்கு இங்கு நடத்தப்படும் பிரமோஷன் பணிகள் நடக்க கூடாது என்றும், உடனடியாக அங்கே அரங்கில் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
அவர்களிடம் நடிகர் சித்தார்த் அவர்கள் சமரசம் பேச முயன்ற நிலையில், அந்த கன்னட அமைப்பினர் உடனடியாக நடிகர் சித்தார்த் அங்கிருந்து வெளியேறியே ஆக வேண்டும் என்று கூச்சலிடத் துவங்கினர். ஒரு கட்டத்தில் பதட்டம் ஏற்பட்ட நிலையில், நடிகர் சித்தார்த் அவர்கள் அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து புறப்பட்டார்.
காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்பினர் இதுபோல நடந்து கொள்வது கடும் கண்டனத்திற்கு உரியது என்று பலரும் தற்பொழுது கருத்து தெரிவித்து வருகின்றனர்.