மகாராஷ்டிரா மாநிலத்தில் 2016 ஆண்டு 16 பேரை கொடூரமாக தாக்கு  கொன்று தின்ற புலியை சுட்டுக்கொலை செய்த வனத்துறை அதிகாரியை மையப்படுத்தி எடுக்கப்படும் உண்மை கதையில், நடிகர் சிபிராஜ் நடிக்க உள்ளார். 

சிபிராஜ், மற்றும் சத்யராஜை வைத்து 'ஜாக்சன் துரை' என்கிற திகில் படத்தை இயக்கிய தரணிதரன், மீண்டும் சிபிராஜ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். 

இந்த படத்தில் சிபிராஜ் வனத்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் கதை ஒரு உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக கொண்டது. 

அதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் அவ்னி என்ற புலி, 16 மனிதர்களை வேட்டையாடி கொன்று தின்றது. இதனையடுத்து நீதிமன்றம் அந்த புலியை சுட்டு பிடிக்க உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், பெரும் போராட்டத்திற்கு பின் அவ்னி புலியை சுட்டுக்கொன்றனர். இந்த புலியை சுட்டு கொன்ற வனத்துறை அதிகாரி அக்சார் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்த கேரக்டரில் தான் தற்போது நடிகர் சிபிராஜ் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் சிபிராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே, சிபிராஜ் நடித்த 'சத்யா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.