திரையில் இருந்தும், மக்கள் மனதில் இருந்தும் மறைத்து போன நடிகர், நடிகைகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்தியில் 13 பாகங்களாக பட்டையைக் கிளப்பி வரும் அந்நிகழ்ச்சி, தமிழில் 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது. பெரிதாக பணம் கிடைக்காது என்றாலும், மக்கள் மத்தியில் கிடைக்கும் புகழுக்கு ஆசைப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் ஏராளம். அதுபோல் வந்தவர்கள் தான் நமீதா, ஷெரின், காயத்ரி ரகுராம், ஜூலி, ஜாங்கிரி மதுமிதா, சேரன் உள்ளிட்டோர் எல்லாம். 

நீண்ட நாட்களாக திரையில் வராமல் இருந்த தன்னை மீண்டும் மக்களிடம் நினைவு படுத்துவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டார் சித்தப்பு சரவணன். ஆசை, ஆசையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னை அநியாயமாக ஏமாற்றிவிட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டின் சூது எதுவும் தெரியாமல் கள்ளம் கபடமில்லா மனிதராக வலம் வந்தவர் சரவணன். சில நாட்களிலேயே இவரது குணம் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தவளை தன் வாயால் கேட்டது போல. காலேஜ் போறப்போ பஸ்ல போகும் போது கூட்டத்தில இருக்கிற பெண்களை உரசுவேன் என ஏடாகூடமாக கமலிடம் சொல்லி மாட்டிக்கொண்டார். 

சரவணனின் அந்த பேச்சு ஆடியன்ஸை கொந்தளிக்க வைத்ததால், அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். பேரும், புகழும் கிடைக்கும் என ஆசையாக போன என்னை அவப்பெயருடன் வெளியே அனுப்பிவிட்டார்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லாம் ஒரு போங்காட்டம் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இருந்தாலும்  மக்கள் மறந்த என்னை மீண்டும் அவர்கள் முன்பு கொண்டு சேர்த்ததற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் நம்ம சித்தப்பு சரவணன். வெள்ளந்தி மனுஷன் சார் நீங்க...!