பணப்பெட்டி டாஸ்க்கில் வழக்கமாக பெட்டி மட்டுமே அனுப்பப்படும், ஆனால் இந்த முறை பெட்டியுடன் நடிகர் சரத்குமாரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இதில் அமீர் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றதன் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மீதமுள்ள ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, நிரூப், பாவனி ஆகிய ஆறு பேரில் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பரிசை வெல்பவருக்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்படும். மற்ற போட்டியாளர்களுக்கு எந்தவித பரிசும் கிடைக்காது. ஆனால் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்த பின்னர் போட்டியாளர்களுக்கு ஒரு பணப்பெட்டி அனுப்பப்படும், அதில் இருக்கும் தொகையை எடுத்துக்கொள்பவர்கள் அந்த தொகையுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.

இதுவரை நடந்த 4 சீசன்களில் கவின் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் மட்டுமே இவ்வாறு வெளியேறி உள்ளனர். தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் இன்று அந்த பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பெட்டி மட்டுமே அனுப்பப்படும், ஆனால் இந்த முறை பெட்டியுடன் நடிகர் சரத்குமாரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த பெட்டியில் ரூ.3 லட்சம் இருப்பதையும் அவர் போட்டியாளர்களுக்கு எடுத்துரைக்கிறார். அந்த தொகையை எடுத்துச் செல்லப்போவது யார் என்ற கேள்விக்கு விடை இன்றையை எபிசோடில் தெரிந்துவிடும். மேலும் சரத்குமார் வந்துள்ளதால், அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் இவர் தொகுத்து வழங்க போகிறாரா என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

YouTube video player