சர்கார் விஜய் ஸ்டைலில் காமெடியன் சந்தானம் முரட்டுத்தனமாக தம் அடிக்கும் ’டகால்டி’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எதிர்பார்த்ததை விட அதிக புகைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் ச்சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் அவர்.

ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கும் ’டகால்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு சில தினங்களுக்கு முன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது.போஸ்டரில் சந்தானம் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் வகையில் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

விஜய் நடிப்பில் உருவான ’சர்கார்’ திரைப்படத்தின் போஸ்டரில் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிராக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு முன்பாக ரஜினி, விஜய் ஆகியோர் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பது குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். ஆனால், சந்தானம் நடிக்கும் படத்தின் போஸ்டரில் அதே போன்ற புகைப்படம் இடம்பெற்றிருப்பினும் அதுகுறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் சந்தானத்தின் மேல் உள்ள பாசத்தால் அன்புமணி மூச் விடவில்லை.

இந்நிலையில் இந்தச் சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாக சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில், “டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்த உள்நோக்கமுமின்றி பதிவேற்றப்பட்டுவிட்டது. உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் புகைப்பழக்கத்தை புரொமோட் செய்யும்படியாக அமைந்திருப்பதைப் பின்னரே உணர்ந்தோம். இனிவரும் என் படங்களில் இதுபோன்ற போஸ்டர்கள் கட்டாயம் இடம் பெறாது” என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படி வருத்தம் தெரிவிப்பவர்கள் வழக்கமாக வருத்தத்திற்குக் காரணமாக டிசைனை வலதளங்களிலிருந்து நீக்கிவிடுவார்கள். ஆனால் சந்தானம் அதைச் செய்யவில்லை. காரணம் அவர் சரியான டகால்டியாச்சே.