ரிக்‌ஷா ஓட்டுனரின் மகன், பாலோ டான்ஸ் பயிற்சிக்கு பணம் இல்லாமல் தவிப்பதை அறிந்து பிரபல நடிகர் உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விகாஸ்புரி என்ற பகுதியை சேர்ந்தவர், ரிக்‌ஷா தொழிலாளியின் மகன் கமல்சிங். இவருக்கு சிறிய வயதில் இருந்தே பாலோ டான்ஸ் மீது கொள்ளை விருப்பம். இவரின்  ஆசையை நிறைவேற்ற இதுவரை பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர்.

தற்போது 20 வயதாகும் கமல்சிங்,  உலகப் புகழ்பெற்ற லண்டனில் உள்ள ஆங்கில தேசிய பாலே நடனப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பினார். இதற்காக அவர் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த பள்ளியில் சேர, இந்தியாவில் இருந்து இவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பள்ளியில் இடம் கிடைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. குறிப்பாக இந்தியாவில் பலர் விண்ணப்பித்திருந்த நிலையில், இவர் மட்டுமே அங்கு பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கமல்சிங் லண்டன் சென்று பாலே நடனம் கற்க இடம் கிடைத்தாலும், கூலி வேலை செய்து வரும் அவருடைய தந்தையால் அங்கு அனுப்பி படிக்க வைக்கும் அளவிற்கு பணம் இல்லை. சீட் கிடைத்தும் தன்னுடைய கனவு நிறைவேறாததால் அதிருப்தியில் இருந்தார் கமல் சிங்.

இந்நிலையில் இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கமல்சிங் கனவு குறித்து அறிந்த பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் உடனடியாக 3 லட்சம் ரூபாய் கொடுத்து கமல் சிங்கின் பாலே நடனம் பயிற்சிக்கு உதவியுள்ளார். இதுகுறித்து கமல் சிங்கின் பயிற்சியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளதால் இவர் சத்தம் இல்லாமல் செய்த உதவி வெளியே வந்துள்ளது.