தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் ராணா. கடந்த 2010 ஆம் ஆண்டு, லீடர் என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் பேர் விருது இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் தமிழில், தல அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் மிலிட்டரி ஆபீஸராகவும், அஜித்தின் நண்பராகவும் நடித்திருந்தார்.இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான பாகுபலி படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். 

நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட்  சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர் என திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.பல ஆண்டுகளாக மிரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில் ராணா காதலை சொல்ல மிஹீகாவும் உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. 

தற்போது இந்தியாவையே ஆட்டி படைக்கும் கொரோனா பிரச்சனை காரணமாக மே 31ம் தேதி வரை லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு ராணா, மிஹீகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இருவரும் நிச்சயதார்த்தத்தில் மகிழ்ச்சி பொங்க ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 


இந்நிலையில் மிஹீகாவுடன் காதலில் விழுந்தது எப்படி என்று ராணா மனம் திறந்துள்ளார். எங்களுடைய குடும்பமும், மிஹீகாவின் குடும்பமும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே ஐதராபாத்தில் வளர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு பொதுவான நண்பர்கள் அதிகம். லாக்டவுனில் நிறைய நேரம் கிடைத்தது திருமணத்தை பற்றி யோசித்தேன். அதனால் தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன். எப்போதும் சினிமா துறையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வது பற்றி யோசித்தது கிடையாது. மிஹீகாவை பார்த்தேன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன். எனது துணையை பார்த்துவிட்டேன் அவ்வளவு தான் என தான் காதலில் விழுந்த கதையை கூறியுள்ளார்.