குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அசாமில் ஆரம்பித்து சென்னை வரை உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஐஐடி, லயோலா, சென்னை பல்கலைக்கழகம் போன்ற கல்லூரிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து, பிரபல நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. "பிரித்தாளும் சூழ்ச்சி என்பது, காலங்காலமாக புளித்துப் போன விசயம் என்றும், இஸ்லாமியர்கள் என்பவர்கள் ஏதோ அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள் போலவும், அவர்களது நாடு பாகிஸ்தான் என்பது போலவும் மக்கள் மனதில் நச்சுக்கருத்துக்கள் பதிவிடப்படுவதாக" வேதனை தெரிவித்துள்ளார்.  

"எல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே என்று கூறியுள்ள ராஜ்கிரண், தனது தந்தையின் மூதாதையர்கள் சேதுபதிச்சீமையின் மறவர் குலம் என்றும், தாயாரின் மூதாதையர்கள் சேதுபதிச்சீமையின் மீனவர் குலம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் ரத்த சொந்தங்கள் என்று தெரிவித்துள்ள ராஜ்கிரண், இந்து மதத்தில் உள்ள தீண்டாமை போன்ற கொடுமைகளில் இருந்து தப்பித்து, சுயமரியாதையோடு வாழவே இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதாகவும் தெரிவித்துள்ளார். பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு, அதில் மனித நேயமே மாண்பு என்ற தனது கருத்தை பதிவிட்டுள்ள ராஜ்கிரணை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.