கொரோனா பிரச்சனையின் காரணமாக... பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் பிழைப்பு தேடி வந்த இடத்திலும் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் போனது. இதன் எதிரொலி அன்றாடம் உண்ணும் உணவிற்கே பலர் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு... தொடர்ந்து தன்னுடைய தாய் அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்து வருகிறார் பிரபல நடிகரும் - இயக்குனருமான ராகவா லாரன்ஸ். கொரோனா  நிதிக்காக 'சந்திரமுகி 2' படத்திற்காக தான் வாங்கிய 3 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகை முழுவதையும் கொடுத்தது மட்டும் இன்றி, மேலும் பல உதவிகளை செய்து வருகிறார்.

சமீபத்தில்  பத்திரிகையாளரின் தாயார், ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த ராகவா லாரன்ஸ், உடனடியாக கேரள முதல்வருக்கு கடிதம் எழுதி, அந்த பத்திரிகையாளரின் தாயார் உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். மருத்துவமனைக்கு தர வேண்டிய ஒரு லட்ச ரூபாய் செலவையும் அவரே ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, குஜராத்தில் பிழைக்க சென்ற, தமிழர்கள் பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்ட 10 திற்கும் மேற்பட்டவர்கள், ஊரடங்கு துவங்கியதில் இருந்து, கடந்த இரண்டு மாதமாக, உண்ண உணவில்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும், குழந்தைக்கு பால் வாங்க வெளியில் சென்றால் கூட போலீசார் அடிப்பதாக கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே கலங்க செய்தது.

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தமிழக அரசுக்கும், குஜராத் அரசுக்கும் அந்த குடும்பத்தை மீட்க வேண்டுகோள் விடுத்தார். இந்த குடும்பத்திற்கு உதவுங்கள் என்றும் தனது பக்கத்தில் இருந்து எந்த உதவி தேவைப்பட்டாலும் அதை செய்ய தயாராக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் அந்த தமிழ் குடும்பம் சிக்கி தவிக்கும் ராஜ்கோட்  பகுதிக்கு, மாவட்ட ஆட்சியர் சென்று,  அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் உதவிகளையும் செய்ததோடு, அவர்கள் விரும்பினால், தமிழகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என குஜராத் அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராகவா லாரன்ஸ் குஜராத் முதலமைச்சருக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.